நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம் பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானிசாகர் அணைக்கு திறக்கப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 611 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 89.21 அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 11 ஆயிரத்து 833 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 90.27 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், பாசனத்திற்காக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story