164 பேருக்கு கொரோனா; 2 பேர் மட்டுமே உயிரிழப்பு


164 பேருக்கு கொரோனா; 2 பேர் மட்டுமே உயிரிழப்பு
x

மதுரையில் நேற்று புதிதாக 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகக் கடுமையாக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை போல மதுரையிலும் நாளுக்குநாள் பாதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. 
அந்த வகையில் நேற்று புதிதாக 164 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 55 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை 70 ஆயிரத்து 843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 939 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 67ஆயிரத்து 451 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
3 ஆயிரத்துக்கும் கீழ்
சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து 2 ஆயிரத்து 341 ஆக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து அதிலிருந்து குணமடைந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
மதுரையில் கடந்த 9-ம் தேதி நிலவரப்படி 10 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருந்தனர். அதன் பின்பு தினமும் குணமடைந்த செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மதுரையில் நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.
அவர்கள் 70 வயது மூதாட்டி, 48 வயது ஆண் ஆகும். மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1050 ஆக அதிகரித்துள்ளது.

Next Story