போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த வாலிபர் சிக்கினார்


போலி நகைகளை அடகு வைத்து  மோசடி செய்த வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 19 Jun 2021 1:11 AM IST (Updated: 19 Jun 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே ஒரே நாளில் 4 அடகுக் கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.6 லட்சம் மோசடி செய்த வாலிபர் சிக்கினார். அவரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலூர்,ஜூன்.
மேலூர் அருகே ஒரே நாளில் 4 அடகுக் கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.6 லட்சம் மோசடி செய்த வாலிபர் சிக்கினார். அவரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி நகைகள்
மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் கடந்த 8-ந்தேதி டிப்-டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் போலியான தங்க நகைகளை அடகு கடைகளில் கொடுத்து ரூ.6 லட்சத்து 16 ஆயிரத்தை மோசடி செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.
பாலசுப்பிரமணியன் (வயது 53) என்பவரது அடகு கடையில் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும், திருமலை அடகு கடையில் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், ஹரினி அடகு கடையில் 85 ஆயிரம் ரூபாயும், காளீஸ்வரி நகைக்கடையில் 86 ஆயிரம் ரூபாயும் பெற்றுக்கொண்டு தப்பி விட்டார்.
இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர். 
வாலிபர் சிக்கினார்
இந்த நிலையில் வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு நபர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்தார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியபோது அவர்தான் அடகு கடைகளில் போலி நகைகளை கொடுத்து மோசடி செய்தவர் என்பதும், அவர் தேவகோட்டை சருகணி அருகே உள்ள பின்னலங்கோட்டையைச் சேர்ந்த சிவசக்தி (25) என்பதும் தெரிய வந்தது.
பறிமுதல்
இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து ரூ.4 லட்சம், ஒரு மோட்டார்சைக்கிள், வீட்டு மனைகள் வாங்கிய பத்திரங்கள், போலி தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். முன் பின் தெரியாத நபர்கள் அடகு கடைகளில் நகைகளை அடகு வைக்க வந்தால் கவனமுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story