ஊராட்சி தலைவரின் கார் மீது தாக்குதல்


ஊராட்சி தலைவரின் கார் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 19 Jun 2021 1:19 AM IST (Updated: 19 Jun 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே ஊராட்சி தலைவரின் வீடு புகுந்து கார், தெருவிளக்குகள் சேதப்படுத்தப்பட்டன.

சோழவந்தான்,
ஜூன்.
சோழவந்தான் அருகே ஊராட்சி தலைவரின் வீடு புகுந்து கார், தெருவிளக்குகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊராட்சி தலைவர்
செல்லம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பூங்கொடி பாண்டி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேலநிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியும், அங்கன்வாடி மையம் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் குறிப்பிட்ட அந்த இடத்தில் கட்டுமானப் பணியை மேற்கொள்ள சிலர் தடை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் அந்த இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணியை தொடங்கினர்.
தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் நேற்று முன் தினம் இரவு சிமெண்டு கலவை எந்திரத்தை அடித்து நொறுக்கினர். இதை தடுத்த 2 பேரை தாக்கி காயப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து மலையூர் கிராமத்துக்கு வந்து ஊராட்சி தலைவர் பூங்கொடி பாண்டி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைலியை வைத்து மூடி வீட்டின் முன்னால் இருந்த மின் விளக்குகளை சேதப்படுத்தி உள்ளனர். 
பின்னர் வீடு புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட கார் மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊராட்சி தலைவர் பூங்கொடி பாண்டி விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
விசாரணை
இது தொடர்பாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊராட்சி தலைவர் வீடு முன்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நேற்று முன் தினம் இரவு பாஸ்கரன் என்பவரது மகன் ரித்தீைஷ ஊராட்சி தலைவரின் மகன் விஜய் உள்ளிட்ட 23 பேர் தாக்கி காயப்படுத்தியதாக விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story