ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் சசிகலாவை கண்டித்து தீர்மானம்; கட்சியை அபகரிக்க பார்ப்பதாக குற்றச்சாட்டு

அ.தி.மு.க. கட்சியை சசிகலா அபகரிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டியும், அவரை கண்டித்தும் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு
அ.தி.மு.க. கட்சியை சசிகலா அபகரிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டியும், அவரை கண்டித்தும் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. கூட்டம்
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் (முன்னாள் எம்.எல்.ஏ.) கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார்.
சசிகலாவுக்கு கண்டனம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக சசிகலா அறிவித்தார். தற்போது கட்சி வலுவாகவும், பொலிவாகவும், தொண்டர் படையும், செல்வாக்கும் பெற்று இருப்பதை பார்த்து அரசியலில் முக்கியத்துவத்தை தேடிச்செல்ல அ.தி.மு.க. கட்சியை அபகரிக்கும் முயற்சியில் உள்ளார். ஒவ்வொரு நாளும் சிலருடன் தொலைபேசியில் பேசுவதும், அதை ஊரறியச்செய்ய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதும் என்று வினோதமான நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். மகத்தான இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஒப்பற்ற தியாகத்தின் மூலம் புகழ் பெற்று இருக்கும் அ.தி.மு.க. கட்சியை அபகரிக்க முயற்சி செய்வதை கண்டிக்கிறோம்.
நன்றி
* தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக பாடுபட்ட முன்னாள் முதல் -அமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்- அமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 75 தொகுதிகளில் கட்சியை வெற்றி பெறச்செய்த கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
* கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளின் அறிவுரையின்படி உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
* கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருக்கும் காலத்தில் தடுப்பூசிகள் போட மக்களை அலைக்கழித்து நாடகமாடும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீஷ், முருகுசேகர், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






