அம்மாபேட்டையில் மாணவியை கடத்தி திருமணம்; போக்சோ சட்டத்தில் தாய்-மகன் கைது


அம்மாபேட்டையில் மாணவியை கடத்தி திருமணம்; போக்சோ சட்டத்தில் தாய்-மகன் கைது
x
தினத்தந்தி 19 Jun 2021 2:35 AM IST (Updated: 19 Jun 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டையில் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

அம்மாபேட்டை
அம்மாபேட்டையில் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
மாணவி
அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கடந்த 6-ந் தேதி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து மாணவி தனது பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ‘தான் சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்துள்ள ஆலச்சம்பாளையம், காட்டூரை சேர்ந்த, பூபதி (வயது 24) என்பவருடன் பழகி வந்தேன்.
கடத்தி திருமணம்
இந்த நிலையில் அவர் என்னை ஆசை வார்த்தை கூறி எடப்பாடி அருகே உள்ள வெள்ளுத்து பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு பூபதியின் தாய் சண்முகவள்ளி (40) எனக்கு மெட்டி வாங்கி கொடுத்தார். பின்னர் கோவிலில் வைத்து பூபதி எனக்கு தாலிகட்டி அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார்’ என்று கூறினார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் ஆலச்சம்பாளையத்தில் உள்ள பூபதி வீட்டுக்கு சென்று அந்த மாணவியை மீட்டனர்.
தாய்-மகன் கைது
மேலும் இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூபதியையும், அவருடைய தாய் சண்முகவள்ளியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட மாணவியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story