வெட்டையன் கிணர், வீரணம்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் தேசிய உதவித்தொகை தேர்வில் வெற்றி; மாதம்தோறும் ரூ.1,000 கல்வி நிதி கிடைக்கும்
தேசிய உதவித்தொகை தேர்வில் வீரணம்பாளையம், வெட்டையன்கிணர் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி நிதி கிடைக்கும்.
ஈரோடு
தேசிய உதவித்தொகை தேர்வில் வீரணம்பாளையம், வெட்டையன்கிணர் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி நிதி கிடைக்கும்.
தேர்வு
அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் மேல்நிலைக்கல்வியை சிரமமின்றி தொடர கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் மத்திய-மாநில அரசுகளால் தேசிய உதவித்தொகை தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் அதாவது பிளஸ்-2 படிப்பு முடிக்கும் வரை மாதம்தோறும் தலா ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த தேர்வு நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் நிதி உதவி பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
242 பேர் வெற்றி
இதில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 242 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று உள்ளனர். அதிக பட்சமாக பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 18 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர். இங்கு 27 பேர் தேர்வு எழுதினார்கள்.
இதற்கு அடுத்தபடியாக வெட்டையன் கிணர் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 7 பேர் தேர்வு எழுதியதில் 4 பேர் வெற்றி பெற்று உள்ளனர். ஆயிக்கவுண்டன்பாளையம் பள்ளிக்கூடத்தில் 3 பேர் வெற்றி பெற்று உள்ளனர். பிற பள்ளிக்கூடங்களில் 2 பேர், ஒருவர் என தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
வெற்றி பெற்ற 242 மாணவ-மாணவிகளுக்கும் வரும் இந்த கல்வி ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு மாதம் தலா ரூ.1,000 கல்வி நிதி கிடைக்கும்.
பாராட்டு
வீரணம்பாளையம் மற்றும் வெட்டையன் கிணர் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து 8 ஆண்டுகளாக இந்த வெற்றியை தக்க வைத்து வருகின்றன. மாவட்ட அளவில் வீரணம்பாளையம் பள்ளிக்கூடம் 8 ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளது. வெற்றி பெற்ற நந்தகிஷோர், இந்திரஜித், தினேஷ்குமார், தேவஸ்ரீதர், ஆதவன்ராஜா, கோகுலகண்ணன், ரஞ்சித், மைதிலி, நைஸ்லின் மரியம், கலையரசி, மைத்ரேயி, மோனிகா, தேமித்ரா, ரஞ்சிதா, தனுஸ்ரீ, ஸ்டெல்லாஸ்ருதி, பிருந்தா, அன்னபூரணி ஆகிய 18 மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை சத்தியசெல்வி, ஆசிரியர் மயில்சாமி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
வெட்டையன் கிணர் பள்ளிக்கூடத்தில் வெற்றி பெற்ற மாணவிகள் மேனகா, ஜெனிபர்மேரி, மாணவர்கள் வசந்த், கவுதம் ஆகியோரை தலைமை ஆசிரியை ஜெ.பானுரேகா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story