பெருந்துறை அருகே மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் பலி
பெருந்துறை அருகே மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் பலி ஆனது.
பெருந்துறை
பெருந்துறையை அடுத்துள்ள திருவாச்சி அருகே உள்ள பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 50). விவசாயி. இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள ஆட்டுக்கொட்டகையில் 4 செம்மறி ஆடுகளையும் கட்டிவிட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலை ரங்கசாமி எழுந்து ஆட்டுக்கொட்டகைக்கு சென்று பார்த்தார். அப்போது 2 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறந்தும், மேலும் 2 ஆடுகள் படுகாயத்துடனும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவாச்சி ஊராட்சித் தலைவர் சோளிபிரகாஷ் அங்கு சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டு, ஆடுகளை பறிகொடுத்த விவசாயி ரங்கசாமிக்கு ஆறுதல் கூறினார். மேலும் இது குறித்து ஊராட்சித்தலைவர், ஈரோடு மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் தேவராஜ், குணசேகரன் ஆகியோர், இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘நாய்கள் கடித்ததால் தான் ஆடுகள் பலியாகிவிட்டன. வேறு காட்டு விலங்குகள் எதுவும் இங்கு வந்து ஆடுகளை கடிக்க வாய்ப்பில்லை’ என்று குறிப்பிட்டனர். இதனால், அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story