நெம்மேலி கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலையில் வெளிநாட்டு தொழில்நுட்ப அடிப்படையில் கட்டுமானப்பணிகள்
நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் 2-வது ஆலையின் கட்டுமான பணிகள் வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலை
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் தற்போது நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் திறன் கொள்ளளவு கொண்ட கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுத்திகரிக்கப்படும் குடிநீர், குழாய்கள் மூலம் அடையாறு, திருவான்மியூர், பெசன்ட்நகர், வேளச்சேரி, கந்தன்சாவடி, பாலவாக்கம், கொட்டிவாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம், சிறுசேரி சிப்காட் வளாகம், ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி, மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆலைக்கு அருகே 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் மற்றொரு 2-வது புதிய ஆலை ரூ.1,260 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டில், ஜூன் மாதம் இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டு தொடக்கத்தில் சில மாதங்களும் திட்டப்பணிகள் தடைபட்டன.
தொழில்நுட்ப கட்டிடம்
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது நீர் கொள்கலன்கள் அமைத்தல், கடல் நீரை உள்வாங்கும் ஆழ்நிலை நீர் தேக்க தொட்டி, கரைந்த காற்று நிறைத்தல் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீரை தேக்கி வைக்கும் தொட்டி, நுண்வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் கட்டிடம், சுத்திகரிக்கப்பட்டு சேகரிக்கும் நீர் தேக்க தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம், தரைதளம் முதல் பல அடுக்குகள் கொண்ட தொழில்நுட்ப கட்டிடம் அமைத்தல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இந்த ஆலையில் இருந்து வினியோகம் செய்ய பல்லாவரம் வரை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகளும், சோழிங்கநல்லூர் பகுதிக்கு இங்கிருந்து செல்லும் 6.80 மில்லியன் கன லிட்டர் நீரை சேமிக்க கீழ் நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நீர் உந்து நிலையம் அமைக்குமம் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதேபோல் என்ஜினீயர்கள், ஆலை பராமரிப்பு அதிகாரிகள், குடிநீர் வினியோக பிரிவு அலுவலர்கள் ஆகியோருக்கு என வட்டவடிவில் தரைதளம் முதல் பல அடுக்குகள் கொண்ட அலுவலக கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன.
9 லட்சம் மக்கள் பயன் பெறுவர்
வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இந்த பணிகளில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த புதிய குடிநீர் ஆலையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் குழாய் பதிக்கும் பணிகளை திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிப்பதற்கு ஏதுவாக குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக புதிய குடிநீர் ஆலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த புதிய குடிநீர் ஆலை திட்டத்தின் மூலம் தென் சென்னை பகுதியில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story