மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி 26 பவுன் நகை பறிப்பு


மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி 26 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2021 1:16 AM IST (Updated: 20 Jun 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி 26 பவுன் நகை பறிப்பு குறித்து போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி 26 பவுன் நகை பறிப்பு குறித்து போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மதுரை அண்ணாநகர் எஸ்.எல்.சி.காலனியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 85). கணவர் இறந்து விட்டதால் இவர் மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் அதே பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வேறு ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் உள்ளார்.
சம்பவத்தன்று சரஸ்வதி வீட்டில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் 2 மர்ம ஆசாமிகள் புகுந்தனர். அவர்களில் ஒருவன் திடீரென்று சரஸ்வதி முகத்தை துணியால் மூடி, அவர் சத்தம் போடாமல் இருக்குமாறு பிடித்து கொண்டான். மற்றொருவன் மூதாட்டி அணிந்திருந்த 26 பவுன் நகையை பறித்தான். பின்னர் இருவரும், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பேரன் சிக்கினான்

அவர்கள் சென்ற பிறகு மூதாட்டி சத்தம் போட அக்கம்,பக்கத்தில் இருப்பவர்கள் வந்து விசாரித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசாரும் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டியிடமிருந்து நகை பறித்தது அவரது பேரன், அவனது நண்பர் என தெரியவந்தது. பாட்டி அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு பேரனே நண்பரின் உதவியுடன் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
தன்னுடைய பேரன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதை அறிந்ததும் உடனே அந்த பாட்டி தன்னுடைய நகைகள் பத்திரமாக வேறு இடத்தில் இருந்ததாகவும், எனவே வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என கூறி இருக்கிறார். இருப்பினும் போலீசார் மூதாட்டியின் மகன், அவரது குடும்பத்தினரை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story