பவானி, அந்தியூரில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு; தடைசெய்யப்பட்ட பகுதிக்கும் சென்று குறைகளை கேட்டறிந்தார்
பவானி, அந்தியூர் பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு செய்தார். தடைசெய்யப்பட்ட பகுதிக்கும் சென்று பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
ஈரோடு
பவானி, அந்தியூர் பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு செய்தார். தடைசெய்யப்பட்ட பகுதிக்கும் சென்று பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
கலெக்டர் திடீர் ஆய்வு
பவானி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அங்கு பவானி மருத்துவ அதிகாரி டாக்டர் சூரியபிரபா தலைமையில் நேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணி நடந்தது. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா என்று டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பவானி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் கோபாலகிருஷ்ணன், சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரம், வழங்கப்படும் மருந்துகள், மருத்துவ அதிகாரிகளின் விவரம் குறித்து விளக்கி கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதி
பவானி நகராட்சியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சென்று ஆய்வு செய்தார். வர்ணபுரம் 3-வது வீதி மற்றும் குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி பகுதியில் வேதகிரிமலை அடிவாரம், ஜீவாநகர், ஊராட்சிக்கோட்டை, தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
தொட்டிபாளையம் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு செய்தபோது, அவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடுத்து கூறினார். இந்த ஆய்வின்போது ஜம்பை வட்டார மருத்துவ அதிகாரி தனலட்சுமி, பவானி நகராட்சி ஆணையாளர் கதிர்வேலு, நகராட்சி சுகாதார அதிகாரி செந்தில், பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரி குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் அருகே உள்ள ஐடியல் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார். அங்கு தங்கியுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், சிகிச்சை மையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதா, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளனவா ஆகியன பற்றியும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story