சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: சத்தி புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கண்காணிக்க குழு அமைப்பு
சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தாளவாடி
சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு குழு
சென்னை வண்டலூர் வனஉயிரின பூங்காவில் கொரோனா தொற்று பாதிப்பால் 3 சிங்கங்கள் உயிரிழந்த நிலையில் மேலும் 5 சிங்கங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள சரணாலயங்கள், புலிகள் காப்பகங்களில் உள்ள சிறுத்தை, புலி, யானைகள் போன்ற விலங்குகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனவா என கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி 1,485 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் வனவிலங்குகளை கண்காணிக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குனர் கிருபா சங்கர் தலைமையில் கால்நடை டாக்டர், உதவி வனப்பாதுகாவலர், வனச்சரக அதிகாரி, வனவர், வனக்காப்பாளர் ஆகிய 6 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
விரிவான அறிக்கை
சத்தியமங்கலம், பவானிசாகர், ஜீர்கள்ளி, தலமலை, தாளவாடி, கேர்மாளம், கடம்பூர் உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் 6 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினர் வனத்தையொட்டி உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களில் தென்படும் யானை, சிறுத்தை, புலிகள் குறித்து கண்காணித்து வருகின்றனர். அதில் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையில் திரிகின்றனவா என்பது குறித்து கண்காணிப்பு குழுவினர் ஆடு, மாடு மேய்க்கும் பழங்குடியினரிடம் விசாரித்து வருகின்றனர்.
எனவே தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 2 மாநில எல்லையில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசுக்கு வனத்துறையினர் சமர்ப்பித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story