திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி; 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலத்துக்கு கிராணைட் கற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று காலை 7 மணிஅளவில் தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 15-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது திடீரென பழுதாகி நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களும், கார்களும் என சிறியரக வாகனங்கள் சென்று வந்தன.
மற்ற அனைத்து வாகனங்களும் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் தமிழக-கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பண்ணாரி சோதனை சாவடியிலும், ஆசனூர் சோதனை சாவடியிலும் கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பண்ணாரியில் இருந்து லாரி பழுது நீக்குபவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் லாரியில் ஏற்பட்ட பழுதை பகல் 11 மணிஅளவில் சரி செய்தனர். அதன்பிறகு அந்த லாரி அங்கிருந்து புறப்பட்டதை தொடர்ந்து அங்கு போக்குவரத்து சீரானது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story