ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் லாட்டரி, போதைப்பொருட்கள் விற்பனை செய்த 202 பேர் கைது; ரூ.1¾ லட்சம் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில், லாட்டரி மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 202 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில், லாட்டரி மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 202 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
202 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கடந்த 7-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையிலான 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், சட்டவிரோத லாட்டரி விற்பனை, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 25, கஞ்சா 21½ கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1½ டன், 8 சேவல்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 880 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
மேலும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வாகனங்கள் அரசுடமை ஆக்கப்பட உள்ளன. சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள், போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீதும் மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி 96552 20100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
மேற்கண்ட தகவலை, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story