ஈரோட்டில் தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம்


ஈரோட்டில் தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2021 9:24 PM GMT (Updated: 19 Jun 2021 9:24 PM GMT)

ஈரோட்டில் தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஈரோடு
ஈரோட்டில் தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தடுப்பூசி
ஈரோட்டில் தடுப்பூசி முகாம்களில் நேற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, மத்திய-மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த தடுப்பூசிகள் செலுத்துவதில் தொடக்கத்தில் மக்களுக்கு சற்று அச்சம் இருந்தது. ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாலும், கொரோனா 2-ம் அலை ஏற்படுத்திய தாக்கத்தை விட 3-ம் அலை இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை வந்து கொண்டு இருப்பதாலும் தற்போது ஏராளமானவர்கள் தடுப்பூசிகள் போட ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால் மக்களின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்து வினியோகம் செய்யப்படாததால் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
போட்டி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 5 ஆயிரத்து 254 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மட்டுமே சுமார் 20 லட்சம் பேர் உள்ளனர்.
அப்படி என்றால் இந்த அடிப்படையில் பார்த்தாலும் இன்னும் சுமார் 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி தேவைப்படுகிறது. எனவே கிடைக்கும் ஊசியை போட்டுக்கொள்ளலாம் என்று பொதுமக்கள் போட்டிப்போட்டு மையங்களுக்கு படை எடுத்து வருகிறார்கள்.
இரவிலும் வரிசை
நேற்று தடுப்பூசி மையங்கள் காலை 7 மணி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவிலேயே பன்னீர்செல்வம் பூங்கா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட தடுப்பூசி மையத்தில் ஏராளமானவர்கள் டோக்கன் பெற வரிசையில் நின்றனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம், திருநகர்காலனி, பழையபாளையம், கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி என்று அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Next Story