தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு: பிறந்து ஒரே நாளே ஆன பச்சிளங்குழந்தை கடத்தல்


தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு: பிறந்து ஒரே நாளே ஆன பச்சிளங்குழந்தை கடத்தல்
x
தினத்தந்தி 20 Jun 2021 11:22 PM IST (Updated: 20 Jun 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து ஒரே நாளே ஆன பச்சிளங்குழந்தையை பெண் ஒருவர் கடத்தி சென்றார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி (வயது 35). தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி மாலினி (19). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இதனிடையே மாலினி கர்ப்பமான நிலையில் பிரசவத்துக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாலினிக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று காலை மாலினி தனது குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு குளியல் அறைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதபடி குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை.

கடத்தல்

இதுகுறித்து மாலினி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அருள்மணி மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது பச்சிளங்குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுபற்றி குழந்தையின் பெற்றோர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் குழந்தை காணாமல் போனது குறித்து தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அங்கு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனர்.
 போலீசார் விசாரணை
அப்போது குழந்தையை ஒரு பெண் எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை எடுத்து செல்லும் அந்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளங்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story