கோபியில் தடுப்பூசி போடும் பணியை முறைப்படுத்தக்கோரி நகராட்சி ஆணையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகை
கோபியில் தடுப்பூசி போடும் பணியை முறைப்படுத்தக்கோரி நகராட்சி ஆணையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கடத்தூர்
கோபியில் தடுப்பூசி போடும் பணியை முறைப்படுத்தக்கோரி நகராட்சி ஆணையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட வாய்க்கால் ரோடு பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடும் பணி நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அங்கு இருப்பு உள்ள நிலவரத்தை பொறுத்து டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் தினமும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து பார்த்துவிட்டு, தடுப்பூசி இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். மேலும், தடுப்பூசி எப்போது வருகிறது, எப்போது போடப்படுகிறது போன்ற விவரங்கள் தெரியாததால் அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
முற்றுகை
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து முறையாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் சிலர் கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள நகராட்சி ஆணையாளர் வீடு முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். அப்போது அவர்களிடம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் பொதுமக்கள் கூறியதாவது:-
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி எப்போது போடப்படுகிறது, எத்தனை நபர்களுக்கு போடப்படுகிறது என்ற அறிவிப்பு முறையாக வழங்கப்படுவதில்லை. தடுப்பூசி பற்றிய தகவல் பரவியதும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது.
முறைப்படுத்த கோரிக்கை
பல மணிநேரம் காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே தடுப்பூசி போடுவதை முறைப்படுத்த வேண்டும். மக்கள் அலைக்கழிக்கப்படாத வகையில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான அறிவிப்பு முறையாக அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதற்கு நகராட்சி ஆணையாளர் ராமசாமி, “தடுப்பூசி போடும் பணி சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்த அதிகாரிகளிடம் சென்று குறைகளை தெரிவியுங்கள்”, என்றார். இதனால் மக்கள் அங்கிருந்து திரும்பி சென்றார்கள்.
Related Tags :
Next Story