கள்ளிப்பட்டி அருகே தடுப்புகளை அகற்றியதாக தகவல்: தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
கள்ளிப்பட்டி அருகே தடுப்புகளை அகற்றியதாக தகவல் பரவியதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அதிகாாிகள் சென்று மக்களை எச்சாித்தனா்.
டி.என்.பாளையம்
கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் ஊராட்சிகளில் சுமார் 140 பேருக்கு கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பங்களாப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி கொரோனா மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கணக்கம்பாளையம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த நிலையில் பூஞ்சோலை கிராமத்தில் உள்ள சிலர் தடுப்புகளை அகற்றிவிட்டு அடிக்கடி வெளியில் சென்று வருவதாக தகவல் பரவியது.
இதுபற்றி அறிந்த கோபி தாசில்தார் விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கள்ளிப்பட்டி சுகாதார ஆய்வாளர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் நேற்று காலை அங்கு சென்று தடுப்புகளை மீண்டும் அடைக்க உத்தரவிட்டனர். மேலும் கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story