பெருந்துறை அருகே ஒரே பகுதியில் 18 பேருக்கு கொரோனா; பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்


பெருந்துறை அருகே ஒரே பகுதியில் 18 பேருக்கு கொரோனா; பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 20 Jun 2021 9:23 PM GMT (Updated: 20 Jun 2021 9:23 PM GMT)

பெருந்துறை அருகே ஒரே பகுதியில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பெருந்துறை
பெருந்துறை அருகே ஒரே பகுதியில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
18 பேருக்கு கொரோனா
பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பட்டக்காரன்பாளையம் ஊராட்சியில் ஆதி திராவிடர் காலனி உள்ளது. அங்கு 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர்கள் பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
மேலும், கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும், 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் 7 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
தனிமைப்படுத்தப்பட்டனர்
எனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பட்டக்காரன்பாளையம் ஆதி திராவிடர் காலனியில் இருந்து பொதுமக்கள் வெளியில் வராத வகையிலும், வெளிநபர்கள் அங்கு செல்லாத வகையிலும் தடுப்புகள் அமைத்து அடைக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பெருந்துறை தாசில்தார் கார்த்திக், கிராம நிர்வாக அதிகாரி சந்துரு மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தடுப்புகள் மற்றும் முட்புதர்களை வைத்து தனிமைப்படுத்தினார்கள்.
அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்காக பட்டக்காரன்பாளையம் ஊராட்சி சார்பில், தற்காலிகமாக 3 நடமாடும் கழிப்பிடங்களும் அமைத்து கொடுக்கப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்து வரும் அந்த காலனியை சேர்ந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பும் வரை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அதன்பிறகு தடுப்புகள் அகற்றப்படும் என்றும் பெருந்துறை தாசில்தார் கார்த்திக் தெரிவித்து உள்ளார்.

Next Story