ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான ஒயர்கள் எரிந்து நாசம்


ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான ஒயர்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 21 Jun 2021 3:06 AM IST (Updated: 21 Jun 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஒயர்கள் எரிந்து நாசமானது.

ஈரோடு
ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஒயர்கள் எரிந்து நாசமானது.
கரும்புகை
ஈரோடு செங்கோட்டையா வீதியை சேர்ந்தவர் சுனில்குமார். இவர் ஈரோடு பஸ் நிலையம் அருகே மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எலக்ட்ரிக்கல் கடை பூட்டியே இருந்தது. இந்தநிலையில் அந்த கட்டிடத்தின் 4-வது தளத்தில் மின் ஒயர்கள் இருப்பு வைக்கும் குடோனில் நேற்று முன்தினம் நள்ளிரவு கரும்புகை வந்தது.
ஒயர்கள் எரிந்து நாசம்
இதைப்பார்த்த காவலாளி சுனில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், விரைந்து வந்த சுனில்குமார் கடையை திறந்து 4-வது மாடிக்கு சென்று பார்த்தபோது விற்பனைக்காக இருப்பு வைத்திருந்த மின் ஒயர்களில் தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மின் ஒயர்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Next Story