திருவொற்றியூரில் வீடு கட்டும் தகராறில் மீனவர் அடித்துக்கொலை
திருவொற்றியூரில் வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மீனவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடு கட்டுவதில் தகராறு
திருவொற்றியூர் பூங்காவனம்புரத்தை சேர்ந்தவர் குப்பன் (வயது 46). மீனவர். இவருக்கும், ஒண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மோகன் (36), ரகு (45), துரைராஜ் (56). ஆகியோருக்கும் இடையே ஒண்டிகுப்பம் பெருமாள் கோவில் அருகில் வீடு
கட்டுவதில் தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த 17-ந் தேதி அவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. கட்டையாலும், கற்களாலும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் சாவு
இது தொடர்பாக திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இந்த மோதலில் குப்பனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதை சரி செய்வதற்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு குப்பன் வயிற்றில் அதிகமாக தொந்தரவு இருப்பதாக கூறியதால், டாக்டர்கள் அவரது வயிற்றுப்பகுதியில் சோதனை செய்து பார்த்தபோது வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முற்பட்டனர். அப்போது சிகிச்சை பலனின்றி குப்பன் பரிதாபமாக இறந்தார்.
2 பேர் கைது
இதையடுத்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் பொன்சங்கர், இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மோகன், ரகு ஆகியோரை கைது செய்தனர். துரைராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story