கருப்பட்டியில் கலப்படத்தை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது


கருப்பட்டியில் கலப்படத்தை தடுக்க  சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 21 Jun 2021 9:16 PM IST (Updated: 21 Jun 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

கருப்பட்டியில் கலப்படத்தை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை, ஜன
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக அரசின் மரம் பனைமரம். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல்வேறு பயன்களை தருகின்றன. அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவை. பனங்கூழ், பனம்பழம், பனை வெல்லம், பனை கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றில் பலப்பல மருத்துவ குணங்கள் உள்ளன. உடன்குடி, வேம்பார் பகுதிகளில் பனைவெல்லம் மற்றும் பனங்கற்கண்டு ஆகியவை பிரசித்தி பெற்றவை. ஆனால் பனைவெல்லம், கருப்பட்டி ஆகியவை தயாரிக்கும்போது, சர்க்கரை பாகு, சர்க்கரை ஆகியவற்றுடன் சில ரசாயனங்களை சேர்க்கின்றனர்.
இதனால் பனை வெல்லம், கருப்பட்டியை பயன்படுத்துபவர்களுக்கு உடல் உபாதைகளும், பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. மேலும் பனை பொருட்கள் மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைக்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலந்து பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். கலப்பட பனைவெல்லம், கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கருப்பட்டியில் கலப்படத்தை தடுப்பதற்கு சிறப்பு குழுவை உணவு பாதுகாப்புத்துறை ஏற்படுத்தி உள்ளது. அந்த குழு மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.

Next Story