அந்தியூர் வாரச்சந்தைக்கு வெளியே சாலையோரமாக கடைகள் அமைத்ததால் போக்குவரத்து பாதிப்பு


அந்தியூர் வாரச்சந்தைக்கு வெளியே சாலையோரமாக கடைகள் அமைத்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 3:41 AM IST (Updated: 22 Jun 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் வாரச்சந்தைக்கு வெளியே சாலையோரமாக கடைகள் அமைத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தைக்கு வெளியே சாலையோரமாக கடைகள் அமைத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
வாரச்சந்தை
அந்தியூர் சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை கூடுகிறது. அங்கு காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளும் வந்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள். 
வாரச்சந்தை அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களாக அந்தியூர் வாரச்சந்தை செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
இந்தநிலையில் நேற்று சந்தை கூடும் தினம் என்பதால் சந்தை வளாகத்துக்கு வெளியே வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து இருந்தனர். மேலும், பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்களும் காலை 6 மணியில் இருந்தே அங்கு திரண்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் மறந்து, காய்கறிகளை ஆர்வமாக வாங்கி சென்றார்கள். இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.
அந்தியூர், தவுட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், புதுப்பாளையம், பிரம்மதேசம், அத்தாணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்காக குவிந்தனர். சாலையோரமாக கடைகள் அமைக்கப்பட்டு இருந்ததால், சத்திரோடு, பர்கூர்ரோடு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்தியூர் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்கள்.

Next Story