ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 4 இடங்களில் மஞ்சள் ஏலம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் (புதன்கிழமை) 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் (புதன்கிழமை) 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது.
மஞ்சள் ஏலம்
தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பரவல் உள்ள மாவட்டத்தில் ஈரோடு மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. ஊரடங்கு, கட்டுப்பாடு போன்றவற்றால் கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை சங்கம் என 4 இடங்களிலும் மஞ்சள் ஏலம் நிறுத்தப்பட்டது.
வேளாண் பொருட்களை, ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யலாம் என அரசு அறிவித்தும், கொரோனா பரவலால் மஞ்சள் ஏலம் நடத்துவதை தவிர்த்தனர்.
விதைப்பு பணி
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) முதல் மஞ்சள் ஏலத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-
கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் வருகிற 28-ந் தேதி வரை அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கு தளர்வு ஏதும் வழங்கவில்லை. அதேநேரம், புதிய மஞ்சள் அறுவடை செய்யும் விவசாயிகள், அவற்றை குடோனில் பாதுகாத்து வைத்து வருகின்றனர். மேலும் புதிய மஞ்சள் விதைப்பு பணியும் பல்வேறு பகுதியில் தொடங்கி உள்ளது.
4 இடங்களில்...
மஞ்சள் சாகுபடியை தொடங்க விவசாயிகள் சிரமப்படுகின்றனர். விவசாயத்துக்கான செலவினங்களை மேற்கொள்ள, மஞ்சள் ஏலத்தை தொடங்கினால் உதவியாக இருக்கும் என எண்ணுகின்றனர். அதற்கேற்ப மராட்டியம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மஞ்சள் ஏலம் தொடங்கி நடந்து வருகிறது.
எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 இடங்களிலும் மஞ்சள் ஏலத்தை நாளை (புதன்கிழமை) முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்க வரும்போது சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து, அரசு தெரிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து ஏலத்தை நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story