சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் துணிகரம் பணம் போடும் எந்திரத்தில் ரூ.10½ லட்சம் நூதன திருட்டு


சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் துணிகரம் பணம் போடும் எந்திரத்தில் ரூ.10½ லட்சம் நூதன திருட்டு
x
தினத்தந்தி 22 Jun 2021 12:29 AM GMT (Updated: 22 Jun 2021 12:29 AM GMT)

சென்னையில் 4 இடங்களில் ஏ.டி.எம். மையத்தில் பணம் போடும் எந்திரத்தில் நூதன முறையில் ரூ.10½ லட்சம் திருடிய மர்மநபர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், வள்ளுவர் சாலையில் எஸ்.பி.ஐ. வங்கி உள்ளது. அருகிலேயே அதன் ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. வங்கி மேலாளர் முரளிபாபு, ஏ.டி.எம். மையத்துக்கு சென்று, பணம் எடுக்கும் மற்றும் டெபாசிட் செய்யும் வசதி கொண்ட எந்திரத்தில் பொதுமக்கள் பணம் டெபாசிட் செய்தது மற்றும் பணம் எடுத்தது போக மீதி எவ்வளவு பணம் உள்ளது? என வங்கி அதிகாரிகளுடன் கணக்கு பார்த்தார்.

அதில் ரூ.1½ லட்சம் மாயமாகி இருந்தது கண்டு வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாடிக்கையாளர்கள் அதில் இருந்து பணம் எடுத்து சென்றதற்கான விவரங்கள் எதுவும் இல்லை. ஆனால் பணம் மட்டும் எடுக்கப்பட்டு இருந்தது.

நூதன திருட்டு

பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஏ.டி.எம். மையத்துக்கு 2 மர்மநபர்கள் வந்தனர். அதில் ஒருவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார்.

இருவரும் பணம் டெபாசிட் செய்யும் எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் வீதம் 15 முறை மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் தீவிரமாக ஆய்வு செய்ததில் அவர்கள், நூதன முறையில் அந்த பணத்தை திருடியது தெரிந்தது.

அதாவது, பணம் டெபாசிட் மற்றும் எடுக்கும் வசதி கொண்ட அந்த எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் போடும்போதும், எடுக்கும்போதும் அதன் ‘ஷட்டர்’ மூடாதபடி 20 நொடிகள் வரை கையால் பிடித்துக்கொண்டால் அந்த பணம் மீண்டும் எந்திரத்துக்குள் சென்றது போலவும், வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கு மீண்டும் திரும்ப சென்றது போலவும் காட்டிவிடும். மர்மநபர்கள் இந்த வித்தையை பயன்படுத்தியே பணத்தை நூதன முறையில் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

ரூ.10½ லட்சம்

இதேபோல் விருகம்பாக்கம், சின்மயா நகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்தையும், வேளச்சேரி விஜயநகர் வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.4 லட்சத்து 98 ஆயிரமும், தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 500-ம் நூதன முறையில் திருடிச்சென்று உள்ளனர்.

இவ்வாறு சென்னையில் மட்டும் 4 இடங்களில் மொத்தம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வரை மர்மநபர்கள் சுருட்டிச்சென்றது தெரிந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story