காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு


காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 22 Jun 2021 6:26 AM IST (Updated: 22 Jun 2021 6:26 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் பஸ்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என கண்காணித்தார்.

காஞ்சீபுரம்,

தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை அறிவித்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து இயங்க உத்தரவிட்டது.

தமிழக அரசின் உத்தரவின்படி நேற்று காலை முதல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகளில் இருந்து 100 அரசு பஸ்கள் சென்னை தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் பஸ்களில் பயணிக்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து உள்ளார்களா? சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என கண்காணித்தார்.

அறிவுரை

கொரோனா விதிமுறைகளை பின்பற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கண்காணித்து நோய்த்தொற்று குறைய உதவிட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

பின்னர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் நிருபர்களிடம் கூறுகையில்:-

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதிமுறைகளான முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றும் வகையில் போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம் ஆஸ்பத்திரி, தடுப்பூசி போடும் முகாம்கள், காய்கறி சந்தை பகுதிகள், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நோய்தொற்று பரவாத வண்ணம் ஊரடங்கு தளர்வினால் திறக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களில் குளிர்சாதன வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதா, கிருமிநாசினி திரவம் வழங்கப்படுகிறதா? என கண்காணிப்பு பணியில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story