தொழிலதிபர் வீட்டில் சொகுசு கார் உள்பட ரூ.1 கோடி பொருட்கள் கொள்ளை ஏ.சி.மெக்கானிக் உள்பட 4 பேர் கைது


தொழிலதிபர் வீட்டில் சொகுசு கார் உள்பட ரூ.1 கோடி பொருட்கள் கொள்ளை ஏ.சி.மெக்கானிக் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 1:02 AM GMT (Updated: 22 Jun 2021 1:02 AM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலதிபர் வீட்டில் சொகுசு கார் உள்பட ரூ.1 கோடி பொருட்களை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் திருவண்ணாமலையில் மடக்கி பிடித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் நயப்பாக்கம் பகுதியில் சொகுசு பங்களா உள்ளது.

இந்த நிலையில், ரவிச்சந்திரன் மனைவி பிரியாவுக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. அதனால் அவரை தனிமைப்படுத்தி கொள்ள மனைவியை சென்னையில் விட்டு தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு மேவலூர் குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தங்கி உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ரவிச்சந்திரன் மற்றும் அவரது இரண்டு மகள்களுடன் தூங்கி கொண்டு இருந்தபோது, மர்ம நபர்கள் இவரது வீட்டின் மாடி வழியாக ஏறி வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த விலையுயர்ந்த 3 எல்.இ.டி. டிவி, ஒரு லேப்டாப், வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த விலை உயர்ந்த ஆடி வகை சொகுசு கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

விசாரணையில் தொய்வு

இதையடுத்து காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டில் பொருட்களை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். ரவிச்சந்திரன் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் போலீசார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. கொள்ளை போன சொகுசு காரில் ஜி.பி.எஸ்.பொருத்தப்பட்டு இருந்ததால், அதை வைத்து கொள்ளையர்கள் திருவண்ணாமலையில் உள்ள வெண்பாக்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

4 பேர் பிடிபட்டனர்

இதையடுத்து அங்கு வீட்டில் பதுங்கி இருந்த ஏ.சி.மெக்கானிக் விஜயசந்திரன் (21), லோகேஷ் (22), பிரவீன்குமார் (24), செங்கல்பட்டு மாவட்டம் கொள்ளம் பேடு அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (22) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், கடந்த ஏப்ரல் மாதம் ரவிச்சந்திரனின் சொகுசு பங்களாவில் புதிய ஏ.சி.பொருத்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜயசந்திரன் வந்துள்ளார். வீட்டை நோட்டாமிட்ட விஜயசந்திரன் தனது கூட்டாளிகளுடன் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து அழைத்து வந்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள லேப்டாப், 3 எல்.இ.டி. டி.வி. மற்றும் ஆடி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story