சென்னிமலை அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி


சென்னிமலை அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 22 Jun 2021 9:41 PM GMT (Updated: 22 Jun 2021 9:41 PM GMT)

சென்னிமலை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பலியானார்.

சென்னிமலை, ஜூன்.23-
சென்னிமலை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பலியானார். 
என்ஜினீயர்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள எல்லக்காடு மினியன்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவருடைய மகன் ராஜேந்திரன் (வயது 41). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் ராஜேந்திரன் கடந்த ஒரு வருடமாக வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார்.
டிராக்டர் மீது மோதல்
இந்த நிலையில் ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பாலத்தொழுவை அடுத்த ஜம்பமடை அருகே சென்று கொண்டிருந்தபோது ரோட்டோரம் நின்றுகொண்டிருந்த டிராக்டர் மீது ராஜேந்திரனின் மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜேந்திரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
சாவு
உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் இறந்த ராஜேந்திரனுக்கு வசந்தி என்ற மனைவியும், 9 வயது மற்றும் 6 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த சம்பவம் எல்லக்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story