தடுப்பூசிக்காக பல மணிநேரம் காத்திருக்கும் பொதுமக்கள்- கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


தடுப்பூசிக்காக பல மணிநேரம் காத்திருக்கும் பொதுமக்கள்- கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 22 Jun 2021 9:41 PM GMT (Updated: 22 Jun 2021 9:41 PM GMT)

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கிறார்கள். எனவே கூட்டம் கூடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கிறார்கள். எனவே கூட்டம் கூடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக காணப்படுவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். இதனால் தடுப்பூசி எங்கு போடப்படுகிறது என்று தினமும் பொதுமக்கள் கேட்டறிந்து, தடுப்பூசி மையத்துக்கு சென்று வருகிறார்கள். ஆனால் முந்தைய நாள் நள்ளிரவில் இருந்தே மக்கள் திரண்டு நிற்பதால் தடுப்பூசி கிடைக்காமல் ஏராளமானவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், வீரப்பன்சத்திரம் அரசு பள்ளிக்கூடம், திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் உள்பட 10 இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அங்கு இருப்பு இருக்கும் அளவை பொறுத்து தினமும் 200 முதல் 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதிலும், மாநகராட்சி பகுதியில் தடுப்பூசிகள் இருப்பு விவரங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் தினமும் தடுப்பூசி மையங்களுக்கு பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பொதுமக்கள் காத்திருப்பு
தடுப்பூசிகள் இருப்பு இல்லாதபோது, அந்த மையங்களுக்கு முன்பு தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தாலும் மக்கள் கலைந்து செல்லாமல் நீண்ட நேரமாக காத்திருப்பதையும் காண முடிகிறது.
இந்தநிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். இதில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் சாலையோரமாக வட்டமிடப்பட்டு உள்ளது. அங்கு அதிக நேரம் நிற்க முடியாமல் தவித்த பொதுமக்கள் சிலர் தங்களது காலனிகளை, குறிப்பிட்ட வட்டத்தில் வைத்துவிட்டு அருகில் உள்ள கட்டிடங்களின் படிக்கட்டுகளில் சென்று அமர்ந்தார்கள். அதிகாலையில் காத்திருந்த நபர்கள் சாலையிலேயே உட்கார்ந்து இருந்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
இதுகுறித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் கூறியதாவது:-
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே போடப்படுகிறது. அதேசமயம் தினமும் வந்து நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே மக்கள் இரவு முழுவதும் தடுப்பூசிக்காக பல மணிநேரம் காத்திருப்பதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. 200 பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டு மற்ற நபர்களை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பி விடுகின்றனர். அதற்கு பதிலாக வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் செல்போன் எண்களை வாங்கி கொண்டு வரிசை எண் அடிப்படையில் டோக்கன் வழங்கலாம். தடுப்பூசி வந்தபிறகு டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்து குறிப்பிட்ட தேதி, நேரத்தில் வரவழைத்து ஊசி போடலாம். இதற்காக ஒவ்வொரு மையத்திலும் ஒரு பணியாளரை நியமிக்கலாம். இதனால் பொதுமக்களுக்கும் சிரமம் குறையும். கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருக்காது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story