பெருந்துறையில் நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலி


பெருந்துறையில் நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 23 Jun 2021 3:12 AM IST (Updated: 23 Jun 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலியாகின.

பெருந்துறை
பெருந்துறையில் நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலியாகின.
கிராம நிர்வாக அதிகாரி
பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சோளிபாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 65). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி.  இவர் 8 ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு  தூங்க சென்று விட்டார். நேற்று காலையில் எழுந்த குருசாமி  பட்டிக்கு சென்று பார்த்தபோது 8 ஆடுகளும் குடல் சரிந்த நிலையில் கடித்து குதறப்பட்டு செத்து கிடந்தன. 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி உடனடியாக திருவாச்சி ஊராட்சித் தலைவர் சோளிபிரகாசுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்துவிட்டு பெருந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டார்.
கால் தடங்கள்
 மேலும் இது குறித்து ஈரோடு மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பலியான ஆடுகளின் உடல்களை பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “பதிவாகி இருந்த கால்தடங்கள் அனைத்தும் நாய்களின் கால்தடங்கள் தான். எனவே நாய்கள் தான் 8 ஆடுகளையும் கடித்து குதறி உள்ளன” என்றனர். 
உரிய நடவடிக்கை
 இது குறித்து அந்த பகுதியினர் கூறும் போது, ‘கடந்த வாரம் இதேபோன்ற சம்பவம் திருவாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகர் பகுதியில் நடந்து உள்ளது. அங்கு 4 ஆடுகளை நாய்கள் கடித்து    குதறியதில் அவைகள் பலியாகின. 
இந்த பகுதியில் பலர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்கள். இதனால் எங்களுக்கு பயமாக உள்ளது. எனவே இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்கவும், மேலும் ஆடுகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Next Story