கொரோனா தடுப்பு பணிகளில் கலெக்டர் தீவிரம்; அம்மாபேட்டையில் ஆய்வு செய்தார்


கொரோனா தடுப்பு பணிகளில் கலெக்டர் தீவிரம்; அம்மாபேட்டையில் ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 23 Jun 2021 3:12 AM IST (Updated: 23 Jun 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அம்மாபேட்டையில் ஆய்வு செய்தார்.

அம்மாபேட்டை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அம்மாபேட்டையில் ஆய்வு செய்தார். 
புதிய கலெக்டர்
ஈரோடு மாவட்டத்தின் புதிய கலெக்டராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பு ஏற்றுள்ளார். அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற இருப்பதாக தெரிவித்து பணியை தொடங்கினார். அதன்படி அடுத்த நாளே பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று அங்கு நோயாளிகளை சந்தித்து பேசினார். நோயாளிகளின் உறவினர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்தார்.
அதுமட்டுமின்றி கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகள், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பவானி அரசு ஆஸ்பத்திரி என்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்று கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை நேரில் பார்வையிட்டும் அதிகாரிகளிடம் கேட்டும் தெரிந்து கொள்கிறார்.
நேற்று ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட சூடமுத்தான் பட்டி பகுதியில் கொரோனா கட்டுப்பாடு பகுதிக்கு நேரடியாக சென்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார். அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் விவரம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அவர் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
கண்காணிப்பு குழு
கொரோனாவின் தாக்கம் தற்போது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தினசரி கொரோனா தொற்றின் எண்ணிக்கை 1,000-க்கும் மேல் என்ற நிலை கடந்த ஓரிரு நாட்களாக குறைந்து உள்ளது. இந்த சராசரி குறையவும், புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாமல் இருக்கவும் அரசின் வழிகாட்டு முறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
இதற்காக வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் களப்பணியையும் முடுக்கி விட்டு இருப்பதுடன், காய்ச்சல், சளி, உடல் வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்க கலெக்டர் அறிவித்து உள்ளார். இதுபோல் வட்டார பகுதிகளில் துணை கலெக்டர் அளவில் உள்ள அதிகாரிகள் தலைமையில் வட்டார மருத்துவ அதிகாரி, போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் கொண்ட கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளால் ஈரோடு மாவட்டம் மீண்டும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் என்று எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

Next Story