ஈரோடு மாவட்டத்தில் 1½ மாதத்துக்கு பின்னர் நடந்த மஞ்சள் ஏலம் - ரூ.60 கோடி வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 1½ மாதத்துக்கு பின்னர் நடந்த மஞ்சள் ஏலம் - ரூ.60 கோடி வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2021 4:49 AM IST (Updated: 24 Jun 2021 4:49 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கால் 1½ மாதத்துக்கு பின்னர் நேற்று மஞ்சள் ஏலம் தொடங்கியது. ரூ.60 கோடி மஞ்சள் வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கால் 1½ மாதத்துக்கு பின்னர் நேற்று மஞ்சள் ஏலம் தொடங்கியது. ரூ.60 கோடி மஞ்சள் வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மஞ்சள் ஏலம்
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதிகளில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலும், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கும்.
இதில் ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தினமும் 1,500 முதல் 2 ஆயிரம் மூட்டைகள் வரையும், 4 இடங்களிலும் சேர்த்து தினமும் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 மூட்டைகள் வரையும் மஞ்சள் விற்பனை ஆகும்.
1½ மாதத்துக்கு பின்னர்...
கொரோனாவுக்கான ஊரடங்கால் கடந்த மே மாதம் 7-ந் தேதிக்கு பின்னர் மஞ்சள் ஏலம் நடைபெறவில்லை. இந்த நிலையில் 1½ மாதத்துக்கு பின்னர் நேற்று மஞ்சள் ஏலம் தொடங்கியது.
இதுபற்றி, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-
மஞ்சள் ஏலம் தொடங்கியதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மராட்டியம் உட்பட சில மாநிலங்களில் முன்னதாக தளர்வு வழங்கியதால், அங்கு மஞ்சள் ஏலம் நடக்கிறது. விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஈரோட்டில் விடுமுறைக்கு முன்பு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை விற்கப்பட்டது. இன்று (அதாவது நேற்று) நடைபெற்ற ஏலத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரம் முதல், ரூ.8 ஆயிரம் வரை விற்பனையாகி உள்ளது. மஞ்சள் தரத்துக்கு ஏற்ப 500 ரூபாய் ஏற்ற, இறக்கமாக உள்ளது.
விலை உயர வாய்ப்பு
கடந்த 44 நாட்களாக மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சராசரியாக தினமும் ரூ.1½ கோடி முதல் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 
மொத்தமாக தற்போது வரை ரூ.60 கோடி வரை மஞ்சள் வர்த்தகம் பாதித்துள்ளது. 75 ஆயிரம் மூட்டைக்கு மேல் விற்பனை ஆகாமல் மஞ்சள் தேங்கிவிட்டது.
தற்போது புதிய மஞ்சள் வரத்தாகி, மஞ்சள் நடவுப்பணி நடக்கிறது. உள்ளூர் விற்பனை, ஏற்றுமதி வாய்ப்பு போன்ற காரணங்களால் வரும் நாட்களில் மஞ்சள் விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story