பெருந்துறையில் பசுமை வனத்துக்குள் அமைந்துள்ள அரசு பள்ளிக்கூடம்


பெருந்துறையில் பசுமை வனத்துக்குள் அமைந்துள்ள அரசு பள்ளிக்கூடம்
x
தினத்தந்தி 24 Jun 2021 4:50 AM IST (Updated: 24 Jun 2021 4:50 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் பசுமை வனத்துக்குள் அரசு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.

பெருந்துறை
பெருந்துறையில் பசுமை வனத்துக்குள் அரசு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.
பசுமை புரட்சி
நவீனகால வளர்ச்சிக்கு ஏற்ப தொழிற்சாலைகள் அதிகமாக பெருகி வருகின்றன. தொழில் புரட்சியாக இது காணப்பட்டாலும், நச்சு வாயு வெளியிடுவது இயற்கைக்கு விரோதியாகவே அமைகிறது. எனவே பசுமையை மீட்டெடுக்க தன்னார்வலர்கள் பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக பெருந்துறை சிப்காட் உள்ளது. இதன்காரணமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலம், நீர் மாசடைந்து உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் அமைந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பூங்கா
பெருந்துறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் 8½ ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. அதில் சுமார் 6 ஏக்கர் நிலங்களில் பல்வேறு மரங்கள், செடி-கொடிகள் வளர்ந்து பச்சை பசேலன காணப்படுகிறது. பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயில் முதல் மேற்கு எல்லை வரை, சுமார் 2 ஆயிரம் அடி தூரம் வரை எங்கு பார்த்தாலும் பசுமை மயமாக காட்சி அளிக்கிறது. 
பள்ளிக்கூடத்தின் நடைபாதையின் இருபுறமும் செடி-கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. எனவே பள்ளிக்கூடத்துக்குள் நுழையும்போதே பூங்காவுக்கு செல்லும் அனுபவம் கிடைக்கிறது. இதேபோல் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பு நீர் நிரம்பிய அல்லி குளம், அதற்குள் தாமரை, அல்லி போன்ற நீர் தாவரங்கள் நேர்த்தியாக வளர்க்கப்பட்டு உள்ளன. 
மூலிகை செடிகள்
இதேபோல் பள்ளிக்கூட வளாகத்தில் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் எதிரே, நச்சு காற்றை உள் இழுத்து தூய்மையான ஆக்சிஜனை வெளியேற்றக்கூடிய உயிரி செடிகள் எனப்படும் பல்வேறு மூலிகை செடிகள், மரங்கள் வளர்க்கப்படுகிறது. அங்கு கம்பிவேலி அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 
துளசி, கீழாநெல்லி, கற்பூரவல்லி, ரணகள்ளி, ஆடாதோடை, நொச்சி, நித்யகல்யாணி, சித்தார்த், வசம்பு, நீர்முள்ளி, பிரண்டை முதலான மூலிகை செடிகளுக்கென, தனித்தோட்டம் உள்ளது. மேலும், பள்ளிக்கூடத்தையொட்டி உள்ள செல்லாண்டியம்மன் கோவில் சுவர்களுக்கு அருகில் தெய்வீக குணம் கொண்ட பன்னீர் புஷ்ப மரம், நாகலிங்க பூ மரம், உத்திராட்சை மரம், வில்வமரம், கடம்ப மரம், அந்திமந்தாரை ஆகியன நட்டு பராமரிக்கப்படுகிறது. இதுதவிர 2 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பூ மரங்கள், பழ மரங்கள், நிழல் தரும் மரங்கள், மர வேலைக்கு பயன்படும் மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதை பார்க்கும்போது அடர்வனம் பள்ளிக்கூடத்துக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 
பாராட்டு
இத்தகைய வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும், அங்கு நாற்றுப்பண்ணை விவசாயமும் நடந்து வருவது தனிச்சிறப்பாகும். வேம்பு, தேக்கு, பூவரசு, பெருநெல்லி போன்ற நாற்று வகைகள் வளர்க்கப்பட்டு தேவையானவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 
பள்ளிக்கூடத்தை பசுமை வனமாக மாற்றிய விவசாய பாடப்பிரிவு ஆசிரியர் கந்தன் மற்றும் மாணவர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

Next Story