நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் ரூ.200 கோடி முறைகேடு 83 பேரின் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதலில் ரூ.200 கோடி முறைகேடு செய்த புகாரில் 83 பேரின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் கிராமத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 6 வழிப்பாதை பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அப்போது போலி ஆவணங்களை கொடுத்து விலை மதிப்புமிக்க அரசு நிலத்தை பட்டா மாற்றம் செய்து 20-க்கும் மேற்பட்டோர் இழப்பீட்டுத்தொகையாக ரூ.200 கோடியை முறைகேடாக பெற்றிருப்பது தெரியவந்தது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க, அந்த பகுதி தாலுகாவை சேர்ந்த பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிலம் எடுப்பு பணிகளை மேற்கொண்டது.
இந்த மோசடி தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நில நிர்வாக ஆணையர், இது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இந்த புகாரை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க, நில நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரூ.200 கோடி இழப்பீடு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், அப்போது தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், புகார் அளித்த நவகோடி நாராயணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீமன் தாங்கல் கிராமத்தில் அரசு நிலத்திற்கு முறைகேடாக பட்டா பெற்று இழப்பீட்டு தொகை பெற்று கொண்ட 83 பேரின் வங்கி கணக்குகளை முடக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட 83 பேரின் நில பட்டாக்களையும் ரத்து செய்த காஞ்சீபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் அவற்றை அரசு நிலங்களாக மாற்றி உள்ளனர்.
அத்துடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு இழப்பீடு வழங்கி, ரூ.200 கோடி முறைகேடு புகார் வழக்கு விசாரணையை தீவிரமாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பீமன்தாங்கல் கிராமத்தில் 7½ ஏக்கர் அனாதினம் நிலத்தை அரசு அலுவலர்கள் துணையுடன் சென்னையை சேர்ந்த ஆஷிஷ் ஜெயின் என்ற ஆசிஸ் மேத்தா (வயது 40) முறைகேடாக தனது பெயருக்கு பட்டா பெற்றுள்ளார். அந்த நிலத்தில் 25 சென்ட் நிலத்தை சிவன்தாங்கலை சேர்ந்த செல்வம் என்பவருக்கு கிரயம் கொடுத்துள்ளார். ஆஷிஷ் ஜெயின் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்திற்கு இந்த நிலத்தை ஒப்படைத்து ரூ.30 கோடி பெற்றதும், செல்வம் ரூ.3 கோடி பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் டி.ஐ.ஜி. சத்யபிரியா, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், இந்த வழக்கு சம்பந்தமாக ஆவணங்களை சேகரித்து ஆய்வு செய்து முக்கிய குற்றவாளிகள் ஆஷிஷ் ஜெயின், செல்வம் இருவரையும் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலி பட்டா பெறுவதற்கு அரசு துறையில் இருந்து யாராவது உதவினார்களா என்பது குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story