அ.தி.மு.க. ஆட்சியில் 3¼ லட்சம் திருமண நிதியுதவி மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு


அ.தி.மு.க. ஆட்சியில் 3¼ லட்சம் திருமண நிதியுதவி மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jun 2021 7:21 AM IST (Updated: 24 Jun 2021 7:21 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தகுதிகளும் இருந்தும் திருமண நிதியுதவி வழங்காமல் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்களை நிலுவையாக வைத்து விட்டு சென்றுள்ளனர் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 90 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் போன்றவற்றை வழங்கினர். 5 பேருக்கு இலவச தையல் எந்திரங்களும், 5 பேருக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது கூறியதாவது:-

பெண்கள் கல்வி கற்கவும், பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். 1989-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

இன்று 8 கிராம் தங்கமும், திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியின் போதெல்லாம் இந்த திட்ட மனு பெறப்பட்ட 2 அல்லது 3 மாதங்களில் நிதியுதவி வழங்கப்பட்டு விடும். ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு நிதியுதவி வழங்கப்படவில்லை.

எனவே 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்களுக்கு நிதியுதவி வழங்காமல் நிலுவையாக வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அவர் நிலுவையாக இல்லாமல் உடனுக்குடன் அனைத்து மனுக்களுக்கும் நிதியுதவியை வழங்கிடுமாறு கேட்டு் கொண்டார்.

இதன் அடிப்படையில் காஞ்சீபுரத்தில் மட்டும் 300 பயனாளிகளுக்கு நிதியுதவியாக ரூ.78.25 லட்சமும், தலா 8 கிராம் தங்க நாணயம் வீதம் ரூ.1.17 கோடி மதிப்பில் 2.4 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் திருமண நிதியுதவியை தாமதமில்லாமல் வழங்குவதற்கான அறிவிப்பையும் முதல்-அமைச்சர் விரைவில் வெளியிட உள்ளார்.

விழாவில் காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வபெருந்தகை, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா, போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட சமூக நல அதிகாரி சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
1 More update

Next Story