கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
மதுரை,ஜூன்
மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை தொடக்கத்தில் கடுமையாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
கொரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதால் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களிடையே அதிக அளவில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினமும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக மக்கள் அதிக ஆர்வத்துடன் கூட்டம், கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
ஆனால் மையங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே தடுப்பூசிகள் வழங்கப்படுவதால், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் திரும்பி செல்கின்றனர். மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 5 லட்சத்து 3 ஆயிரத்து 500 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். நேற்றும் பல இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தட்டுப்பாடு காரணமாக, தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
முன்னுரிமை
தற்போது தமிழகத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் என 2 வகையான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் பெரும்பாலான மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்கள். இளைஞர்கள் சிலர் கோவேக்சின் தடுப்பூசி தான் செலுத்த வேண்டும் என மருத்துவ பணியாளர்களிடம் கேட்கின்றனர். ஆனால் கோவேக்சின் தட்டுப்பாடு காரணமாக, அவர்களுக்கு அந்த தடுப்பூசியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தட்டுப்பாடின்றி தடுப்பூசி மருந்துகளை அதிக அளவில் ஒதுக்கீடு செய்து தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






