628 பேரின் உயிரை பறித்த கொரோனா 2வது அலை
மதுரையில் 628 பேரின் உயிரை பறித்த கொரோனா 2வது அலை
மதுரை, ஜூன்.
தமிழகத்தில் கொரோனாவின் முதல் அலையை காட்டிலும் 2-வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது அதில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வருகிறார்கள்.
சென்னையை போன்று மதுரையிலும் அதிக பாதிப்பும், அதிக உயிரிழப்பும் பதிவாகி வந்தது. கொரோனா முதல் அலையில் இணை நோயாளிகளே அதிகம் பாதிக்கப்பட்டு இறந்தனர். ஆனால், 2-வது அலை எல்லா வயதினரையும் தாக்கியதுடன், உயிரையும் பறித்தது. குறிப்பாக 30 முதல் 70 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்கியது.
மதுரையில் உச்சபட்சமாக ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.. கொரோனாவின் முதல் அலை மற்றும் 2-வது அலைகளில் மொத்தம் 1077 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதிலும் 2-வது அலையின் தொடக்க காலமான மார்ச் மாதம் 15-ந்தேதி முதல் நேற்று வரை 628 பேரின் உயிரை உருமாறிய கொரோனா வைரஸ் பறித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், “மதுரையில் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி முதல் தற்போது வரை 50 ஆயிரத்து 436 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 49 ஆயிரத்து 256 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். 628 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பாதிப்பு அதிகமாக இருந்த காலங்களில் நாளொன்றுக்கு 13 ஆயிரம் நபர்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதன்படி 2-வது அலையில் மட்டும் இதுவரை 7 லட்சத்து 36 ஆயிரத்து 401 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பரிசோதனைகள் செய்ததன் மூலம் மட்டுமே கொரோனா பரவல் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தியதன் விளைவாக உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டது. எனவே தகுதி உள்ள அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்றனர்.
Related Tags :
Next Story