திம்பம் மலைப்பாதையில் விறகுபாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் விறகுபாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2021 2:02 AM IST (Updated: 25 Jun 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் விறகுபாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்
திம்பம் மலைப்பாதையில் விறகுபாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பமுடியாமல் பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் வாடிக்கையாகி விட்டது.
லாரி கவிழ்ந்தது
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு விறகு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி சென்ற போது திடீரென ரோட்டோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த விறகு பாரங்கள் அனைத்தும் சரிந்து ரோட்டில் விழுந்தன. இதில் லாரியின் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.
போக்குவரத்து பாதிப்பு
இதன் காரணமாக அந்த வழியாக வந்த கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார், இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றன. அதன் பிறகு மாற்று லாரி வரவழைக்கப்பட்டு சரிந்து கிடந்த விறகுபாரங்கள் ஏற்றப்பட்டது.
மேலும் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டு மதியம் 12 மணி அளவில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சத்தியமங்கலம் நெடுஞ்சாலைத்துறை போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story