ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக ஜமாபந்தி முகாம்: நல உதவிகள் கேட்டு கோரிக்கை மனுக்கள் குவிந்தன
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் ஜமாபந்தி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் நல உதவிகள் கேட்டு கோரிக்கை மனுக்கள் குவிந்தன.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் ஜமாபந்தி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் நல உதவிகள் கேட்டு கோரிக்கை மனுக்கள் குவிந்தன.
கொடுமுடி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக ஜமாபந்தி முகாம் நடந்தது. அதன்படி கொடுமுடியில் நேற்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. முகாமில் கிளாம்பாடி வருவாய் கோட்டத்தில் உள்ள புஞ்சை கிளாம்பாடி, நஞ்சை கிளாம்பாடி, ஊஞ்சலூர், கொளத்துப்பாளையம், நஞ்சை கொளாநல்லி, புஞ்சை கொளாநல்லி, பாசூர் ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் கோப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் கிளாம்பாடி வருவாய் ஆய்வாளர் தங்கமணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் கிராமங்கள் வாரியாக உள்ள கோப்புகளை கேட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு அலுவலகத்தில் உள்ள சமூக நலப் பாதுகாப்பு திட்ட அலுவலக அறை, வட்ட வழங்கல் அலுவலக அறை, நில அளவையாளர் அலுவலக பதிவேடுகள் அறை, தாலுகா அலுவலக பதிவேடுகள் அறை, ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். முன்னதாக கிளாம்பாடி கிராம நில அளவைகளையும் ஆய்வு செய்தார்.
மேலும் கலெக்டர் அதிகாரிகளிடம் பேசும்போது அனைத்து பதிவேடுகள் மற்றும் கோப்புகள் எல்லாவற்றையும் முறையாக தக்க ஆவணங்களுடன் கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு துறையானாலும் தங்கள் தேவைக்காக ஆவணங்களை எடுத்துச் செல்லும் போதும், திரும்ப ஒப்படைக்கும்போதும் சரியான பதிவுகள் பதியப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) சிவகிரி வருவாய்க் கோட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற உள்ளது.
அதேபோல் பொதுமக்கள் தங்களது பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியம் போன்ற அனைத்து வருவாய் சம்பந்தப்பட்ட மனுக்களையும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 31-ந்தேதி வரை காலஅவகாசம் உள்ளது எனவே அதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் நேரில் வந்து மனுக்கள் கொடுக்க வேண்டாம் https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதள மூலமாகவும் அல்லது இ-சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.
இந்த ஆய்வில் கலெக்டரின் நேரடி உதவியாளர் (பொது) பாலாஜி, கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், மண்டல துணை தாசில்தார் பரமசிவம், தலைமையிடத்து துணை தாசில்தார் மரியஜோசப், சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் (தனி) தாசில்தார் ஆசியா, வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரன், துணை தாசில்தார் (தேர்தல்) தாமோதரன் உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார்.
ஜமாபந்தி முகாமில் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்றி இணைய தளத்தின் வழியாக வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, போன்ற மனுக்களை அனுப்பியிருந்தனர். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் அந்தியூர், கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம், சங்கரா பாளையம், பச்சாபாளையம், தொட்டபாளையம், பூதப்பாடி, பூனாட்சி, முகாசி புதூர், அட்டவணை புதூர், மற்றும் பட்லூர் ஆகிய வருவாய் வட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கக் கூடிய பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இணையதள விண்ணப்ப படிவங்களை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கினார்.
இதில் அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, துணை தாசில்தார் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் உமா, அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், பச்சாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ரமாதேவி, சங்கரா பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கவிதா, கெட்டி சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் பானுரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) பர்கூர் ஊராட்சி பகுதியில் ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது.
பவானி
பவானி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள் மேற்பார்வையில் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு பவானி ஆ கிராமம், ஜம்பை அ மற்றும் ஆ கிராமம், ஒரிச்சேரி, மயிலம்பாடி, வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி, தொட்டிபாளையம், தாளகுளம், ஆண்டிகுளம், மயிலம்பாடி கிராமங்களை சேர்ந்த மக்கள் நல உதவிகள் கேட்டு தங்கள் கோரிக்கை மனுக்களை இணையவழி மூலம் அனுப்பியிருந்தனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சண்முகசுந்தரம், மண்டல துணை தாசில்தார் ராவுத்தர், தேர்தல் துணை தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் மோகனா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story