சத்தி, அந்தியூர், பவானி பகுதியில் வாகன சோதனை கர்நாடக மது கடத்திய 7 பேர் கைது

சத்தியமங்கலம், அந்தியூர், பவானி பகுதியில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
சத்தியமங்கலம், அந்தியூர், பவானி பகுதியில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தீவிர கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. தொற்று அதிகம் உள்ள ஈரோடு, திருப்பூர், சேலம் உள்பட 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க அரசு அனுமதிக்கவில்லை.
இதனால் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மது கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கார் கதவில் மறைத்து
இந்த நிலையில் நேற்று சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 4 பேர் இருந்தனர். சோதனையில் கார் கதவின் உள் பகுதியில் ரகசியமாக மறைத்து அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 380 கர்நாடக மது பாக்கெட்டுகள் மற்றும் 8 மதுபாட்டில்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் 4 பேரும் நம்பியூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 30), ஜபார் (30), ஜலீல் (34), கருப்புசாமி (27) என்பது தெரியவந்தது. இதனால் காரில் கர்நாடக மதுபாக்கெட்டுகள் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 380 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளையும், 8 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் நால் ரோட்டில் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் 2 மூட்டைகளை வைத்து கொண்டு 2 பேர் வந்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். இதில் கர்நாடகா மாநில மதுபாக்கெட்டுகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் விசாரணையில், அவர்கள் பெருந்தலையூர் செரையாம்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத் குமார் (வயது 26), கவுந்தப்பாடி அண்ணா காலனி பகுதியை சேர்ந்த கோபால் (27) என்பதும், இவர்கள் கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து மதுபாக்கெட்டுகளை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 260 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.
பவானி
பவானி அருகே உள்ள இரட்டைக்கரடு பகுதியில் பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி கையில் சாக்குபையுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் உள்ள சாக்குபையை போலீசார் சோதனை செய்தபோது அதில் கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் மயிலம்பாடி கண்ணாடி பாளையம் பச்சப்பாளி பகுதியைச் சேர்ந்த இருசார் கவுண்டன் என்பவாின் மகன் பூபாலன் (25) என்பதும் இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்திவந்து அதை இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 74 கர்நாடக மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அடுத்துள்ள சின்னப்பள்ளம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், சஞ்சீவி மூர்த்தி, கோவிந்தராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாய்க்கால் கரைப்பகுதி மற்றும் வாய்க்கால் மேடு பகுதியில் 5 பேர் நின்று மது விற்று கொண்டிருந்ததை பார்த்தனர்.
விசாரணையில் அவர்கள் கோபி அருகே உள்ள கூகலூர் பகுதியை சேர்ந்த வினோத் (வயது 26), அந்தியூர் ஆதர்ஷ் நகர் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் (37), அதே பகுதியை சேர்ந்த வீரன் (35), பவானி செங்காடு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (37) வர்ணபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (32) என்பதும், அவர்கள் தர்மபுரியில் இருந்து மது பாட்டில்களை மோட்டார்சைக்கிள்களில் வாங்கி வந்து அதனை விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 83 மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்த பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னிமலை
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில்களில் மதுபாட்டில்களை கடத்தி வருவதாக சென்னிமலை போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு கலைமணிக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி மற்றும் போலீசார் சென்னிமலை அருகே மணிமலை பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 6 மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் சென்னிமலையை சேர்ந்த தங்கபாண்டியன் (39), திருமலைசாமி (33), லோகநாதன் (50), கார்த்திக் (29), சொக்கலிங்கம் (46) மற்றும் அறச்சலூரை சேர்ந்த சந்தோஷ் (23) என்பதும், இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கொண்டு வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 122 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






