விசைத்தறி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


விசைத்தறி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Jun 2021 2:44 AM IST (Updated: 25 Jun 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஈரோடு
ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விசைத்தறி உரிமையாளர்
ஈரோடு சூளை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 48). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகள் ஜெயலட்சுமி. உடல் நலக்குறைவு காரணமாக கணவன், மனைவி இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 19-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு உதவியாக மகள் ஜெயலட்சுமி இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஜெயலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை 7.45 மணிக்கு ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
நகை-பணம் கொள்ளை
அப்போது வீட்டில் இருந்த 2 பீரோக்களில் ஒரு பீரோ உடைக்கப்பட்டு துணிகள் கலைந்து கிடந்தன. மேலும் உடைக்கப்பட்ட பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகையை காணவில்லை. அதை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
 இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நன்கு நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். 
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story