கோவில்களை திறக்கக்கோரி ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்களை திறக்கக்கோரி ஈரோடு மாவட்டத்தில்  இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2021 2:59 AM IST (Updated: 26 Jun 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்துமுன்னணி
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன்காரணமாக வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் இந்து கோவில்களை பொதுமக்களின் வழிபாட்டுக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடுமுடி
கொடுமுடியில் மகுடேஸ்வரர் கோவில், புது மாரியம்மன் கோவில், வெங்கம்பூர் வரதராஜ பெருமாள் கோவில்கள் முன்பு நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி அமைப்பின் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோவில்களை திறக்க வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். 
கோபி
கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சியில் இந்து முன்னணியினர் சார்பில்  முத்துமாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோபி நகர துணைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோவில்களை திறக்கக்கோரி கோஷம் எழுப்பினார்கள். 
இதில் நிர்வாகிகள் கார்த்திகேயன், நாகராஜ், நாகேந்திரன், ஹரிகரன், தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடியில் உள்ள ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவில் முன்பு  இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் கே.சி.முருகேசன் தலைமை தாங்கினார். கவுந்தப்பாடி நகர தலைவர் இந்து செல்வம் முன்னிலை வகித்தார். இதில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணியினர் கைகளில் அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், இந்து இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் சபரி உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கவுந்தப்பாடி இந்து முன்னணி நகர பொறுப்பாளர்கள் மற்றும் பி.எம்.எஸ். பொறுப்பாளர்கள் உள்பட பலர் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நம்பியூர்
நம்பியூரில் ஒன்றிய இந்து முன்னணி சார்பில்  வடிவுடை மகாமாரியம்மன், மலையப்பாளையம் உதயகிரி முத்து வேலாயுதசாமி கோவில், எலத்தூர் உள்பட 8 இடங்களில் உள்ள கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நம்பியூர் வடிவுடை மகா மாரியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் பழனிச்சாமி கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் கண்ணன், கருப்பசாமி, பிரபாகர் உள்பட இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சிவகிரி-அந்தியூர்
சிவகிரியில் இந்து முன்னணியினர் சார்பில் வேலாயுதசாமி கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகிரி நகர தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்துகொண்டனர். 
இதேபோல் அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் கணேச பாலதண்டாயுதபாணி மலை கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் அக்னிசட்டி ஏந்தி கொண்டும், வேப்பிலை மாலை அணிந்து கொண்டும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தாளவாடி
தாளவாடியில் ஈரோடு மேற்கு மாவட்ட  இந்து முன்னணி செயலாளர் நாகராஜ் தலைமையில் தாளவாடி கிருஷ்ணர் கோவில், மல்லிகார்ஜூனா கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தாளவாடி மற்றும் அதனை சுற்றி உள்ள அனைத்து கோவில்களையும் திறக்கவேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினர் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். 
சென்னிமலை
சென்னிமலை மலை அடிவாரத்தில் இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னிமலை ஒன்றிய இந்து முன்னணி தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். பா.ஜனதா கட்சியை சேர்ந்த சந்திரசேகரன், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் கோவில்களை தமிழக அரசு உடனடியாக திறக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் பவானீஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி அனைத்து கோவில்களும் திறக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.
பவானி
பவானியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பவானி சங்கமேஸ்வரர் கோவில், செல்லியாண்டி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களின் முன்பு கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கார்த்திகேயன், செந்தில்குமார், சின்னத்துரை, பழனிச்சாமி உள்பட இந்து முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story