ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக பல்வேறு இடங்களில் ஜமாபந்தி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக பல்வேறு இடங்களில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக பல்வேறு இடங்களில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது.
கொடுமுடி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக ஜமாபந்தி முகாம் நடந்தது. அதன்படி கொடுமுடியில் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. சிவகிரி வருவாய் கோட்டத்தில் உள்ள கொங்குடையாம் பாளையம், கொல்லன் கோவில், அஞ்சூர், முருங்கியாம்பாளையம், கொந்தளம், வள்ளிபுரம் ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் கோப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் கொடுமுடி வருவாய் ஆய்வாளர் (சிவகிரி பொறுப்பு) நிர்மலாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் கிராமங்கள் வாரியாக உள்ள கோப்புகளை கேட்டு ஆய்வு செய்தார். முன்னதாக சிவகிரி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் நில அளவை உபகரணங்களை ஆய்வு செய்தார்.
மேலும் ஜமாபந்தி மூலம் இணையதளம் வழியாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 2 மனுக்கள் மீது வருவாய்த்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி எழுநூற்றி மங்கலத்தைச் சேர்ந்த கருப்பணன் (வயது 70) என்ற முதியவருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையினையும், வெங்கம்பூர் பேரூராட்சியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட சவுதாம்பாள் (45) என்ற பெண்ணுக்கு உதவித்தொகைக்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.
இந்த ஆய்வில் ஆட்சியரின் நேரடி உதவியாளர் (பொது) பாலாஜி, கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், மண்டல துணை தாசில்தார் பரமசிவம், தலைமையிடத்து துணை தாசில்தார் மரியஜோசப், சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் தனி தாசில்தார் ஆசியா, வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரன், துணை தாசில்தார் (தேர்தல்) தாமோதரன் உள்ளிட்ட வருவாய் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 3-வது நாளாக ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார்.
கொரோனா பாதுகாப்பு கருதி பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் வழியாக பெறப்பட்டன. நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் பர்கூர் அ கிராமம், பர்கூர் ஆ கிராமம் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பட்டாமாறுதல், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை இணையதளம் வழியாக அனுப்பி வைத்திருந்தனர். அவற்றை அந்தந்த கிராம நிர்வாக அதிகாரிகளிடம் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் கொடுத்தார். அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, மண்டல துணை தாசில்தார் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் உமா, கிராம நிர்வாக அலுவலர்கள் முருகானந்தம் (அந்தியூர்), பர்கூர் கிராம நிர்வாக அலுவலர்கள் முருகேசன் மற்றும் முனியப்பன் உள்பட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 4-வது நாளாக ஜமாபந்தி முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) குப்பாண்டபாளையம், அத்தாணி, கீழ்வாணி, மூங்கில்பட்டி, கூத்தம்பூண்டி, நகலூர், பிரம்மதேசம், வேம்பத்தி ஆகிய உள்வட்ட வருவாய் கிராமங்களில் நடைபெற உள்ளது. எனவே அந்த பகுதி பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை இணையதளம் வழியாக அனுப்பி வைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
பவானி
பவானி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள் தலைமை தாங்கினார். பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கவுந்தப்பாடி ஏபிசி, சலங்கபாளையம் ஏபிசி, கவுந்தப்பாடி புதூர், பெரியபுலியூர், சின்னப்புலியூர், ஆலத்தூர், வைரமங்கலம், ஓடத்துறை, பெருந்தலையூர், உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இணையவழி மூலம் அனுப்பியிருந்தனர்.
இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சண்முகசுந்தரம், மண்டல துணை தாசில்தார் ராவுத்தர், தேர்தல் துணை தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் மோகனா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் இணைய வழியாக பொதுமக்கள் அனுப்பிய கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story