சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் பலாப்பழங்கள் வைத்திருந்த வீட்டை சேதப்படுத்திய யானை


சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் பலாப்பழங்கள் வைத்திருந்த வீட்டை சேதப்படுத்திய யானை
x
தினத்தந்தி 26 Jun 2021 3:10 AM IST (Updated: 26 Jun 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானை பலாப்பழங்கள் வைத்திருந்த வீட்டை சேதப்படுத்தியது.

டி.என்.பாளையம்
சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானை பலாப்பழங்கள் வைத்திருந்த வீட்டை சேதப்படுத்தியது.
தோட்டத்துக்கு சென்ற யானை
சத்தியமங்கலம் அருகே கடம்பூரை அடுத்த ஏலஞ்சியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). விவசாயி. கிராமத்தையொட்டி இவரது தோட்டம் உள்ளது. இவர் தனது தோட்டத்திலும் ஒரு வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் அவர் தனது தோட்டத்தில் பறித்த பலாப்பழங்கள் மற்றும் அறுவடை செய்த வெங்காயத்தை இருப்பு வைத்திருந்தார்.
இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் கடம்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை மகேந்திரனின் தோட்டத்துக்கு வந்தது.
வீட்டை சேதப்படுத்தியது
அப்போது பலாப்பழ வாசனை வந்ததால் அருகே உள்ள அவரது வீட்டு முன்பு சென்று யானை நின்றுள்ளது. அங்கு யாரும் இல்லை. வீடும் பூட்டிக்கிடந்தது. திடீரென அந்த யானை வீட்டின் ஓடுகளை துதிக்கையால் பிடித்து இழுத்தது. இதில் ஓடுகள் மளமளவென்று கீழே விழுந்து உடைந்தன. அதைத்தொடர்ந்து வீட்டின் பக்கவாட்டு சுவரை யானை காலால் மிதித்துள்ளது. இதில் சுவர் இடிந்து விழுந்தது.
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து தோட்டத்து விவசாயிகள் ஓடோடி வந்தனர்,  உடனே பட்டாசு வெடித்து யானையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை அங்கிருந்து சென்றது.
வனத்துறையினர்
இதுகுறித்து தகவல் கிடைத்த விவசாயி மகேந்திரன் நேற்று காலை தனது தோட்டத்து வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி உடனே கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனச்சரகர் கணேஷ் பாண்டியன் (பொறுப்பு) மற்றும் வனஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை சேதப்படுத்திய வீட்டை பார்வையிட்டனர்.  பாதிக்கப்பட்ட மகேந்திரனுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story