உத்திரமேரூரில் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


உத்திரமேரூரில் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2021 6:37 AM IST (Updated: 26 Jun 2021 6:37 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூரில் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரமேரூர், 

உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் திருப்புலிவனம் கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வழங்கி வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் நிலையத்தில் மொத்தமாக நெல் வாங்குவதாக விவசாயிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அந்த பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு லாரியில் கொண்டு வந்த நெல் மூட்டைகளை இறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்வது எந்த விதத்தில் நியாயம் என கோஷமிட்டனர். சம்பவ இடத்திற்கு உத்திரமேரூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளிடமும் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்தவுடன் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story