காஞ்சீபுரத்தில் பூட்டிய வீட்டில் மூதாட்டி பிணம்


காஞ்சீபுரத்தில் பூட்டிய வீட்டில் மூதாட்டி பிணம்
x
தினத்தந்தி 26 Jun 2021 8:01 AM IST (Updated: 26 Jun 2021 8:01 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் பூட்டிய வீட்டில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தாயார் குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பால சரஸ்வதி (வயது 65). இவருடைய கணவர் ராஜமாணிக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பாலசரஸ்வதிக்கு தங்கவேலு (35) என்ற மகன் உள்ளார். டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து 2-வது திருமணம் செய்துகொண்டார்.

இவர் தாயின் வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 2-வது திருமணம் செய்துகொண்ட காரணத்தால் மகன், மருமகளிடம் பாலசரஸ்வதி பேசாமல் பஸ் நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் பணிசெய்து தன்னைத்தானே பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பால சரஸ்வதி உடல்நிலை சரியில்லை என ஆம்புலன்சு மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் அவரை யாரும் பார்க்கவில்லை. இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதி மக்கள் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்குவந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இரும்பு கட்டிலில் பால சரஸ்வதி பிணமாக கிடந்தார். அவர் இறந்து 5 நாட்களான நிலையில் அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story