தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு


தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை” – முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பாராட்டு
x
தினத்தந்தி 27 Jun 2021 12:27 AM IST (Updated: 27 Jun 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மண்ணின் வாழ்க்கையை தம் படைப்புகளில் அழியாத காவியமாக உருவாக்கிய எழுத்தாளர் தி. ஜானகிராமனின் நூற்றாண்டு ஜூன் 28 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதையொட்டி அவரது படைப்புகளைப் பற்றிய 'ஜானகிராமம்' நூல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று மாலை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள  இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் 'ஜானகிராமம்' நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார். 

அப்போது பேசிய முதல்வர், "தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை. அவரது படைப்புகள் குறித்துப் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட இந்நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். தி.ஜானகிராமன் நூற்றாண்டு விழாவை முன்னெடுக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்" என்று குறிப்பிட்டார்.

ஜானகிராமனின் சொந்த ஊர் 
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடிக்கு அருகிலுள்ள தேவங்குடி என்ற  கிராமத்தில் தியாகராஜ சாஸ்திரி - நாகலட்சுமி ஆகியோரின் இரண்டாம் மகனாக தி. ஜானகிராமன் 28.06.1921இல் பிறந்தார். தமிழின் மகத்தான கலைஞரான அவர்  மறைந்து (18.11.1982) முப்பத்தொன்பது ஆண்டுகளாகியும் தி. ஜா.வின் புகழ் நவீன தமிழிலக்கியத்தில் மங்காமல் இருக்கிறது. 

அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தி.ஜானகிராமன், தஞ்சாவூர் மாவட்ட மக்களின் வாழ்வியலைக் கலைத்திறத்துடன் தம் படைப்புகளில் பதிவுசெய்தார். காவிரியும் இசையும் தஞ்சை மண்ணின் இயற்கை வளமும் டெல்டா மனிதர்களின் வாழ்வியல் கோலங்களும் அவரது எழுத்தில் மிக நுட்பமாகப் பதிவாகியுள்ளன. 

சாகித்ய அகாடமி விருது
சாகித்ய அகாடமி விருது பெற்ற தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும் நோக்கில் தி.ஜா. ஆய்வாளர் கல்யாணராமன்,  அவரது படைப்புகளைப் பற்றிய 102 கட்டுரைகளைப் பெற்று, 'ஜானகிராமம்' என்ற பெருநூலைத் தொகுத்துள்ளார். இந்நூலைக் 'காலச்சுவடு' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நூல் வெளியீடு 
முதலமைச்சரின் இல்லத்தில் நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட, 'ஜானகிராமம்' நூலின் முதல் பிரதியை தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரியின் சார்பாக, 'விப்ராஸ் ஆட்ஸ்' நிர்வாக இயக்குநர் திருமதி கெஜலக்ஷ்மி ரகு பெற்றுக்கொண்டார். மேலும், இந்நிகழ்வில் தொகுப்பாசிரியர் கல்யாணராமன், நந்தனம் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாபதி ரகு, கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர்  தா.அ.சிரிஷாராமன், சுந்தரபுத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story