பெங்களூருவில் 2 முறை தடுப்பூசி போட்டு கொண்ட 1,049 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு


பெங்களூருவில் 2 முறை தடுப்பூசி போட்டு கொண்ட 1,049 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2021 2:21 AM IST (Updated: 27 Jun 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட 1,049 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

போலீசாருக்கு கொரோனா

  பெங்களூரு உள்பட கா்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் ஏராளமானவர்கள் உயிர் இழந்துள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய கூட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுமக்களை போல போலீசாருக்கும் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகஅளவில் இருந்தது. அதன்படி, பெங்களூருவில் கொரோனா 2-வது அலையில் 1,797 போலீசார் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.

  அவர்களில் 16 பேர் தங்களது உயிரை இழந்திருந்தார்கள். 1,672 போலீசார், மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் இருந்தபடி சிகிச்சை பெற்று குணமடைந்தனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளான இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், கொரோனா 2-வது அலையில் பாதிப்புக்கு உள்ளான பெரும்பாலான போலீசார், தடுப்பூசியை 2 முறை போட்டிருந்தும், அவர்கள் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது தெரியவந்துள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட...

  அதன்படி, பெங்களூருவில் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 1,049 போலீசார் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட போலீசாருக்கு பெரிய அளவில் உடலில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், காய்ச்சல், இருமல் மட்டுமே இருந்ததாகவும், தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்ததால், அவர்கள் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்பி இருந்ததாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் பெங்களூருவில் ஒட்டு மொத்தமாக 18,900 போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 15 ஆயிரத்து 158 போலீசார் 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டு இருப்பதாகவும், 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கு மற்ற போலீசார் தயாராக இருப்பதாகவும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே உடல் நலக்குறைவு காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story