புஞ்சைபுளியம்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள்; அதிகாரிகளிடம் தூய்மை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
புஞ்சைபுளியம்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மருத்துவ அதிகாரிகளிடம் தூய்மை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மருத்துவ அதிகாரிகளிடம் தூய்மை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடுப்பூசி
புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் அதிகாலை 4 மணி முதலே அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 70 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறையினரால் போடப்பட்டது. மேலும் 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்காக நேற்று தூய்மை பணியாளர்கள் 70 பேர் கே.வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனி வரிசையில் காத்து இருந்தனர்.
வாக்குவாதம்
இந்நிலையில் டோக்கன் வழங்குவதற்காக வந்த வட்டார மருத்துவ அதிகாரி வெங்கடாசலம் தூய்மை பணியாளர்களிடம் இன்று (நேற்று) பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார். எனவே பொதுமக்கள் வரிசையில் நின்று டோக்கன் பெற்றுக்கொள்ளலாம் என்றார். இதனை ஏற்காத நகராட்சி தூய்மை பணியாளர்கள் மருத்துவ அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நாங்கள் முன்கள பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு 90 நாட்கள் முடிந்து விட்டதாகவும், எனவே எங்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை
இதனை ஏற்காத மருத்துவர்கள் பொதுமக்களுக்கு டோக்கன் அளித்தனர். புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதனை தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் அங்கு இருந்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தடுப்பூசி போட்டால் தான் வேலைக்கு செல்வோம் என கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், சுகாதார ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவ அதிகாரியிடம் பேசி தூய்மை பணியாளர்களுக்கு தனியாக முகாம் நடத்தி தடுப்பூசி போடப்படும் என கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story