ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி; நள்ளிரவு முதலே திரண்ட பொதுமக்கள்


ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி; நள்ளிரவு முதலே திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Jun 2021 2:38 AM IST (Updated: 27 Jun 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. நள்ளிரவு முதலே திரண்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. நள்ளிரவு முதலே திரண்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்படும் மையங்களில் இரவிலேயே குவிய தொடங்கி விடுகின்றனர். டோக்கன் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாவட்டத்தில் தற்போது சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் 20 வார்டுகள் வீதம் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
20 மையங்கள்
அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அசோகபுரம், கலைமகள் தெரு, மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம், சூரியம்பாளையத்தில் அருள்நெறி திருப்பணிமன்றம் தொடக்க பள்ளிக்கூடம், திருநகர் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம், கருங்கல்பாளையம், கமலா நகர், சமயபுரம் கோவில் அருகே உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம், கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் தெரு, மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம், பெரியசேமூர் அரசு உயர்நிலை பள்ளிக்கூடம், தண்ணீர்பந்தல் பாளையம் அரசு நடுநிலை பள்ளிக்கூடம், பெரிய வலசு மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம், காந்திஜி ரோடு, சாந்தன் காடு 2-வது தெரு, ஏ.ஜி. சிட்டி பிரைஸ் சென்டர், காந்திஜி ரோடு 3-வது வீதி, இந்து கல்வி நிலையம், எஸ்.கே.சி. ரோடு பிரப் மெட்ரிக் பள்ளிக்கூடம்.
சிதம்பரம் காலனி சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம், ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம், ரகுபதி நாயக்கன் பாளையம் பள்ளிக்கூடம், மூலப்பாளையம் திருமண மண்டபம், நூல்மீல் சென்டர், ஓம் முருகா திருமண மண்டபம், கொல்லம்பாளையம் பள்ளிக்கூடம் ஆகிய 20 மையங்களில் நேற்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
டோக்கன்
மாநகர் பகுதியில் உள்ள 20 மையங்களிலும் முதலில் வந்த 130 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. வழக்கம்போல் நள்ளிரவு முதலே தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் குவியத் தொடங்கி விட்டனர். ஈரோடு நாடார்மேடு மற்றும் சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் மதியம் முதலே பொதுமக்கள் டோக்கன் பெறுவதற்காக காலணிகள், கற்களை வைத்து இடம் பிடித்தனர்.
மாநகர் பகுதியில் உள்ள 20 மையங்களிலும் முதலில் வந்த 130 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.
சென்னிமலை
சென்னிமலையில் உள்ள காமராஜ் நகர் உயர்நிலை பள்ளியில் 200 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக டோக்கன் வாங்க பள்ளிக்கூடம் முன்பு நேற்று அதிகாலை 4 மணிக்கே 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.
இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வரிசையில் நீண்ட தூரத்துக்கு நின்று கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சென்னிமலை போலீசார், பொதுமக்களை ஒழுங்குபடுத்தி சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க நடவடிக்கை எடுத்தனர்.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் 3-வது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று கூத்தம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி, நகலூர் உயர்நிலைப்பள்ளி, மூங்கில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தாமரைக்கரை அரசு ஆரம்பப்பள்ளி, எண்ணமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது.  தடுப்பூசி போடுவதற்காக அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதேபோல் பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கோபி உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 107 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 12 ஆயிரத்து 250 பேருக்கு செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Next Story